
கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தில் நடந்த விபத்து அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜல்லி கற்கள் மற்றும் எம் சாண்ட் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி கழிவுநீர் கால்வாயின் மீது அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் சிலாப் மீது ஏறி இறங்கியபோது பாரத்தை தாங்க முடியாமல் சிலாப் இடிந்துள்ளது.
இதனால் அங்கு பள்ளம் ஏற்பட்டு, லாரியின் பின்பக்க டயர் அதில் சிக்கி கவிழ்ந்ததில் லாரியில் இருந்த ஜல்லி கற்களும் எம் சாண்டும் சாலையோரம் இருந்தவர்களின் மீது கொட்டியுள்ளது. இதில் அந்த இடத்தில் இருந்த பொன்னம்மாள் மற்றும் கோவிந்தராஜ் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அதேபோல், பொண்ணுகான் என்ற 65 வயது முதியவர் படுகாயம் அடைந்த நிலையில் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.