யூடியூப் டயட் வீடியோ பார்த்து டயட் கண்ட்ரோல் – 17 வயது சிறுவன் பரிதாப மரணம்!

"Teenage boy dies after attempting extreme diet from a YouTube video."


கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பர்னட்டிவிளை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், 12-ஆம் வகுப்பு முடித்து பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு தயாராகி வந்தார். உடல் பருமனால் அவதியுற்று வந்த அவர், யூடியூப் வீடியோ பார்த்து உடல் எடையை குறைக்க கடுமையான டயட் திட்டத்தை பின்பற்றியதாக கூறப்படுகிறது.

அதன்படி, தினமும் உணவு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் பழச்சாறு மட்டும் அருந்தி, உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். தொடர்ந்து பல நாள்கள் உணவு தவிர்த்து பழச்சாறு மட்டுமே அருந்தி வந்ததால் சளித்தொல்லை ஏற்பட்டு மூச்சுவிட சிரமப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

சம்பவத்தன்று வீட்டில் திடீரென மூச்சுத்திணறி மயங்கி விழுந்த சிறுவனை குடும்பத்தினர் உடனடியாக குளச்சல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உண்மையில் சளித்தொல்லையால் மூச்சுத்திணறி உயிரிழந்தாரா அல்லது மாரடைப்பால் உயிரிழந்தாரா என்பதை பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின் தெரிவிக்க முடியும் என்றும் கூறியுள்ளனர்.

சிறுவன் மறைவால் குடும்பத்தினரும், உறவினரும் பேரதிர்ச்சியில் இருந்து வருகிறார்கள்.