இன்ஸ்டாகிராம் காதலால் மாணவிக்கு நடந்த கொடூரம்!

A student became the victim of a horrifying incident following a romantic connection formed on Instagram.


கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கிளியூர் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான காளிதாஸ் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. முதலில் நட்பாக தொடங்கிய அவர்களது உறவு, பின்னர் காதலாக மாறியது.

இதையடுத்து இருவரும் அடிக்கடி செல்போனில் பேசுவதும், தனிமையில் சந்திப்பதும் வழக்கமாகி இருந்தது. காதலித்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி மாணவியிடம் காளிதாஸ் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக புகார் எழுந்துள்ளது.

இதனால் அந்த மாணவி தற்போது நான்கு மாத கர்ப்பமாக உள்ள நிலையில் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்ட போது காளிதாஸ் மறுத்து மாணவியின் குடும்பத்தை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மனமுடைந்த மாணவி தாயிடம் உண்மையை தெரிவித்து கதறி அழுததைத் தொடர்ந்து, திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் காளிதாஸை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், போக்சோ சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், பள்ளி மாணவர்கள் செல்போனில் எதைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை பெற்றோர்கள் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் என்றும், தவறான பாதையில் செல்லாமல் பாதுகாப்பது பெற்றோர்களின் கடமை என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.