
இராமேஸ்வர தீவையை இந்திய நிலப்பரப்போடு இணைக்கும், நூற்றாண்டு கடந்து நிற்கும் பாம்பன் இரயில் பாலம் (ஸெர்ஷர் பாலம்) அதன் உறுதி தன்மையை இழந்ததால், கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் பாம்பன் பாலம் வழியாக செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டது.
இதையெடுத்து 550 கோடி மதிப்பில் பழைய பாம்பன் இரயில் பாலம் அருகே இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு இரயில் பாலம் அமைக்கப்பட்டு, கடந்த 06ஆம் தேதி பிரதமர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த புதிய பாலத்தின் சிறப்பு என்ன ? பழைய பாலம் அகற்றப்படுமா ? என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம்.
1911 ஆம் ஆண்டு இந்திய நிலப்பரப்போடு இராமேஸ்வர தீவையை இணைக்கும் வகையில் பாம்பனுக்கும்,மண்டபத்திற்கும் இடையே கடலில் இரயில் பாலம் கட்ட ஆங்கிலேய அரசு முடிவு செய்தது, இதையெடுத்து சிகாகோவின் ஸெர்ஷர் ரோலிங் லிப்ட் பிரிட்ஜ் என்ற நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, இங்கிலாந்தின் தோர்னபி-ஆன்-டீஸின் ஹெட் ரைட்சன் ரூ கோ லிமிடெட் என்ற நிறுவனம் மூலம் இரண்டே ஆண்டுகளில் பாலத்தை கட்டி முடித்தனர்.
143 தூண்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பாலம் கடல் மட்டத்திலிருந்து 12.5 மீட்டர் உயரத்திலும், 2.05 கிமீ நீளத்திற்கு அமைந்துள்ளது. மேலும் பாலத்தின் நடுவே கப்பல்கள் கடந்து செல்வதற்கு ஏற்றவாறு பாலத்தின் மையப் பகுதியில் 289 அடி நீளத்திற்கு தூக்கு பாலம் அமைந்துள்ளது.
1988 ஆம் ஆண்டு சாலை பாலம் கட்டும் வரை, சுமார் 70 ஆண்டுகளாக இந்திய நிலப்பரப்புக்கும் இராமேஸ்வரம் தீவிற்கும் ஒரே இணைப்பாக இந்தப் பழைய கடல் பாலம் மட்டுமே இருந்து வந்தது குறிப்பிடதக்கது.
நூற்றாண்டு கால சேவைக்குப் பிறகு, இரயில் போக்குவரத்தின் போது பாம்பன் பாலத்தின் மைய பகுதியில் உள்ள தூக்கு பாலத்தில் அதிகப்படியான அதிர்வுகள் ஏற்படுவதை சென்னை ஐஐடி நிபுணர்கள் குழு கண்டறிந்தனர். இதனால் பாதுகாப்பு கருதி, 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதியுடன் பாம்பன் பாலம் வழியாக செல்லும் அனைத்து இரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டது.
2019 ஆம் அண்டு பாம்பன் பழைய பாலத்தின் அருகே புதிய பாலம் கட்டும் பணிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 545 கோடி மதிப்பிலான திட்டத்திற்க்கு காணொளி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
5 ஆண்டு பணிகளுக்கு பிறகு பிரதமர் மோடி புதிய இரயில் பாலத்தை திறந்து வைத்துள்ளார்.
இந்தியாவிலேயே முதன்முறையாக, பாலத்தின் நடுவே கப்பல்கள் கடந்து செல்ல செங்குத்து தூக்கு பாலம் இங்கு தான் கட்டப்பட்டுள்ளது. பழைய இரயில் பாலத்தில் உள்ள தூக்குப்பாலம் இரும்பாலானது, 400 டன் எடை கொண்டது. அத்துடன் மனித உழைப்பைக் கொண்டு இயங்கக் கூடியது.
ஆனால் புதிய இரயில் பாலத்தின் நடுவே அமைக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்கு பாலத்திற்கு விமானத் தொழில் நுட்பத்தில் பயன்படுத்தக் கூடிய அலுமினிய உலோகக் கலவை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் எடை சுமார் 650 டன் ஆகும்.
மனித உழைப்பின்றி ஹைட்ராலிக் லிப்ட் மூலம் இவற்றை இயக்கலாம். இதன் மூலம் 5.3 நிமிடத்தில் பாலத்தை மேலே தூக்கி திறந்து விட முடியும். இந்த செங்குத்து தூக்கு பாலம் 33 மீட்டர் உயரம் , 77 மீட்டர் நீளம் ஆகும்.
கப்பல் கடந்து செல்வதற்கு வசதியாக பாலத்தில் இருந்து 17 மீட்டர் உயரத்திற்கு பாலத்தை உயர்த்த முடியும்.
செங்குத்து தூக்கு பாலத்தில் சென்சார்கள் பொருத்தப்பட்டு முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கப்பல் பாம்பன் பாலம் வழியாக கடந்து செல்லும் போது மட்டுமே இந்த செங்குத்து தூக்கு பாலம் திறக்கப்படும்.
பாம்பன் புதிய இரயில் பாலத்தில் மணிக்கு 50 கி.மீ வேகத்தில் வரை இரயிலை இயக்கலாம். இதற்கு முன்னர் மணிக்கு 10 கி.மீ வேகம் வரை தான் இயக்க முடியும். அதே நேரத்தில் , பாம்பன் கடல் பகுதியில் 58 கி.மீ வேகத்தில் காற்று வீசினால் புதிய இரயில் பாலத்தில் இரயில் இயக்க கூடாது என இரயில்வே பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
பழைய பாம்பன் பாலம் நூற்றாண்டு காலப் பழமையானது என்பதுடன், தற்போது அதன் உறுதித் தன்மை குறைந்து கொண்டே வருகிறது. ஒவ்வொரு முறையும் கப்பல்கள், பெரிய படகுகளுக்காக புதிய ரயில் பாலம் தூக்கப்படும் போதும் பழைய பாலத்தை திறப்பதும் பாதுகாப்பானதாக இருக்காது.
விரைவில் பாம்பன் இரயில் தூக்குப் பாலத்தை கடலிருந்து பத்திரமாக அகற்றப்படும் என தெற்கு இரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் கூறினார்.