சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து – மேலாளர் கைது

"Manager arrested after explosion at Sivakasi firecracker factory"

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாரணாபுரம்–அனுப்பன்குளம் சாலையில் சீனிவாசன் மகன் கோபி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில் 50 அறைகள் உள்ளன. 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தினமும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று மாலை 3.30 மணியளவில், ஆலையின் ஒரு அறையில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை எடுத்துச் சென்றபோது திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பள்ளபட்டி முத்துராமலிங்கபுரம் காலனியைச் சேர்ந்த கார்த்திகை செல்வம் (25), சங்கீதா (43), லட்சுமி (45) ஆகியோர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மாரியம்மாள் (50), நாகலட்சுமி (55) ஆகியோர் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் 4 அறைகள் இடிந்து தரைமட்டமான நிலையில் உள்ளது. சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதன் தொடர்ச்சியில், ஆலையின் மேலாளர் பிரபாகரன், போர்மேன் செல்வகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள உரிமையாளர் சீனிவாசனை கைது செய்ய தனிப்படை போலீசார் விசாரணை தீவிரம் செய்து வருகின்றனர்.