
செங்கோட்டை சீவநல்லூர் பகுதியில் உள்ள கோவிலில் நேற்று மதியம் அன்னதானம் நடந்தது. இதற்காக ஏராளமான பொதுமக்கள் கோவிலுக்கு சென்றிருந்தனர். அந்த பகுதியில் உள்ள தென்னை மரத்தில் விஷ வண்டு (கடந்தை குளவி) கூடு இருந்தது. எதிர்பாராதவிதமாக கூடு கலைந்து விஷ வண்டுகள் புறப்பட்டு சுற்றியிருந்த பொதுமக்களை கடித்தன.
இதில் சண்முகம் பிள்ளை (85) மற்றும் அவரது மனைவி மகராசி (78) உள்ளிட்ட 5 பேர் கடிக்கபட்டு, வலி தாங்காமல் தவித்துள்ளனர். உடனே அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகம் பிள்ளையும் மகராசியும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஷ வண்டு கூட்டை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.