
முன்னாள் தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனும், நடிகர், பாடகருமான மு.க.முத்து இன்று (ஜூலை 19) உடல்நலக்குறைவால் காலமானார்.
1948ஆம் ஆண்டு கருணாநிதி – பத்மாவதி தம்பதியருக்கு பிறந்த முத்து, 1970களில் ‘பூக்காரி’, ‘பிள்ளையோ பிள்ளை’, ‘சமையல்காரன்’, ‘அணையா விளக்கு’ போன்ற திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தார். நடிகராக மட்டுமல்லாது, பாடகராகவும் தனது இசைப் பயணத்தை தொடக்கி பல பாடல்களை பாடியுள்ளார். இறுதியாக இசையமைப்பாளர் தேவா இசையில் பாடியிருந்தார்.
வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலக் கோளாறுகள் காரணமாக சிகிச்சை பெற்று வந்த முத்து இன்று காலமானார். அவரது உடல் சென்னை ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மு.க.முத்துவின் மறைவை தொடர்ந்து, அவரது சகோதரரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்கவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளார். அவரின் மறைவுக்கு அரசியல், சினிமா துறையை சேர்ந்தோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.