
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் 2016ஆம் ஆண்டு அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சத்யா பன்னீர்செல்வம். சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் அதிக அளவில் சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இதற்கமைய கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஒருமுறை சத்யா பன்னீர்செல்வத்தின் வீட்டில் சோதனை நடைபெற்றது. தற்போது மீண்டும் அவரின் சொத்து விவகாரங்கள் குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பண்ருட்டி நகரில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று விரைந்து சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும், சத்யா பன்னீர்செல்வத்தின் கணவர் பன்னீர்செல்வம் நகர்மன்ற தலைவராக இருந்த போது, பண்ருட்டி பேருந்து நிலைய இருசக்கர வாகனங்களுக்கான நிறுத்த இடத்தை ஏலம் விடுவதில் ரூ.20 லட்சம் ஊழல் நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.