காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் காலமானார் !!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் காலமானார்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் மூத்த அரசியல்வாதியான குமரி அனந்தன் தனது  93 வது வயதில்  காலமானார். 

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் 

 குமரி அனந்தன், மறைந்த காங்கிரஸ் எம்பியான வசந்தகுமாரின் சகோதரரும், பாஜக மூத்த தலைவராக உள்ள தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமாவார்.

அவர் தனது அரசியல் வாழ்வில் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும் தனித்துவமான கருத்துகளுடன், தமிழறிவுடனும் அரசியலில் தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்தியவராக பார்க்கப்படுகிறார்

அவரது உடல் தற்போது சாலிகிராமத்தில் உள்ள அவரது மகள் தமிழிசை சவுந்தரராஜனின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இறுதிச்சடங்கு  விருகம்பாக்கம் இடுகாட்டில் அரசு மரியாதையுடன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில், அவரது மறைவுக்கு ஒரு வாரத்துக்கான துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் அவரது மறைவுக்கு ஏராளமான அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், சபாநாயகர் அப்பாவு இரங்கல் குறிப்பு வாசித்ததுடன், அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். 

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “தகைசால் தமிழர் விருது வழங்கியபோது வாஞ்சையோடு உறவாடிய குமரி அனந்தன் நினைவு கண்ணீரை பெருக்குகிறது. ஏராளமான நூல்களையும் மேடைகளையும் கண்ட அவர், தனது தமிழறிவால் நம் நெஞ்சங்களில் என்றும் நிலைத்து நிறைந்திருப்பார். தமிழே தன் மூச்சென வாழ்ந்த அவர், நம்  நினைவுகளின் ஒரு பகுதியாக இருக்கிறார்,” என குறிப்பிட்டார். 

மேலும், முதல்வர் நேரில் சென்று குமரி அனந்தன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்  அத்துடன் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என். ரவியும் குமரி அனந்தன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்