கோவிலை அறநிலையத்துறைக்கு மாற்ற ரூ.1½ லட்சம் லஞ்சம் வாங்கிய உதவி ஆணையர் கைது!

Image of Assistant Commissioner arrested for accepting ₹1.5 lakh bribe related to temple transfer to HR&CE department.

கோவை ரத்தினபுரி சுபைதார் லே-அவுட்டைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்(52). கட்டிட கான்ட்ராக்டர் ஆக உள்ள இவர், சூலூர் அருகே பாப்பம்பட்டியில் தங்கள் சமூகத்திற்கு சொந்தமான கோவிலை இந்துசமய அறநிலையத்துறைக்கு மாற்ற உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை 3 மாதத்தில் முடிக்குமாறு மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது.

இதையடுத்து சுரேஷ்குமார், கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்தில் உதவி ஆணையர் இந்திராவை(54) பலமுறை சந்தித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.மேலும் விரைவில் கோவில் மாற்றத்தை செய்து தர ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும், அதை சுரேஷ்குமார் தர மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் இந்திரா, ரூ.1½ லட்சம் தந்தால் போதும் என கூறியதால், லஞ்சம் கொடுக்க மறுத்த சுரேஷ்குமார் நேரே கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். பின்னர் போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து இதை உதவி ஆணையர் இந்திராவிடம் கொடுக்குமாறு தெரிவித்து, அவர் பணத்தை பெற்றுக்கொண்ட போது கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

பாப்பநாயக்கன்பாளையம் பாரதியார் ரோட்டில் உள்ள கடையில் சுரேஷ்குமாரிடம் இருந்து பணத்தை பெற்ற பெண் உதவி ஆணையர் இந்திராவை, லஞ்ச ஒழிப்பு கூடுதல் துணை சுப்கமிஷனர் திவ்யா தலைமையிலான போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். சம்பந்தப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட இந்திரா தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இந்த சம்பவம் கோவை நிர்வாக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.