
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி இரவில், உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட சுமார் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணத்துடன் தொடர்புடையதாக புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த தனியார் விடுதி மேலாளர் மற்றும் பாஜக உறுப்பினர் சதீஷ், அவரது சகோதரர் நவீன், லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.
அப்போது, பறிமுதல் செய்யப்பட்ட பணம் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு செல்லப்பட்டது என மூவரும் வாக்குமூலம் அளித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் மாற்றி வழங்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பாஜகவின் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி மற்றும் உணவக உரிமையாளர் கோவர்த்தன், ஓட்டுநர் விக்னேஷ் மூலம் தங்க கட்டிகளுக்கு பதிலாக ரூ.97.92 லட்சம் பணத்தை சுராஜிடம் கைமாற்றியதும், பாஜக நிர்வாகிகள் எஸ்.ஆர். சேகர், சேகர் கேசவ விநாயகம், கோவர்த்தன் ஆகியோர் நயினார் நாகேந்திரனுக்கு மக்களவை தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ய உதவியதும் சிபிசிஐடி விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கு ஆதாரமாக கால் டேட்டா ஆவணங்களும், வங்கி பணப் பரிமாற்ற விவரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.