
கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்துவின் மகன் பாஸ்கர் மற்றும் அவரது அண்ணன் தவசி ஆகியோர் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இன்று (ஜூலை 17) காலை பாஸ்கர் தனது வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தார். இதையடுத்து அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
தகவல் அறிந்த உடனே கள்ளக்குறிச்சி உதவி காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். பாஸ்கரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பாஸ்கர் கொலை செய்யப்பட்டாரா அல்லது கழுத்தறுத்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் தடயங்கள் மற்றும் சாட்சியங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணம் தொடர்பான உண்மை நிலை தெளிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இந்திரா நகர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.