ஒரே நாளில் இரட்டை கொலை! – ஆலங்குடி பகுதியில் பரபரப்பு

Visual representation of a double murder incident that caused tension in the Alangudi area.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் ஒரே நாளில் இரண்டு கொலை சம்பவங்கள் நடந்து பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

ஆலங்குடி அருகே கல்லாலங்குடி கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் (24) டாடா ஏஸ் வாகனம் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு பாத்தம்பட்டி சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு தனது வாகனத்தை நிறுத்தி உள்ளே செல்ல முயன்றபோது, முன்கூட்டியே காத்திருந்த நால்வர் அடங்கிய கும்பல் அவரை கடுமையாக தாக்கி, சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்மு அங்கிருந்து தப்பிச் சென்யுள்ளனர்

தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரஞ்சித்தின் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை உடனடியாக மூடப்பட்டது.

அதே போல ஆலங்குடி காவல் சரகத்தில் வன்னியன்விடுதி கிராமத்தைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளி சுப்புக்கண்ணு தனது மகன் ராமதாஸ் (31) உடன் ஏற்பட்ட தகராறில் அவரை கடுமையாக தாக்கி கொன்றுள்ள சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுப்புக்கண்ணு அரையப்பட்டி பகுதியில் மரப்பட்டறை வைத்து தச்சுத் தொழில் செய்து வருகிறார். தனது மகன் ராமதாஸை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பியுள்ளார். ஆனால் அங்கு வேலை செய்யாமல் சில மாதங்களிலேயே சொந்த ஊருக்குத் திரும்பி வந்து மது போதையில் இருந்துள்ளார்.

தனக்குத் திருமணம் செய்து வைக்கவில்லை என்று நேற்று இரவு தனது தந்தையின் மரப்பட்டறைக்குச் சென்று பொருட்களை உடைத்தவர் தந்தையையும் தாக்கிய போது தந்தை சுப்புக்கண்ணு மகன் ராமதாஸ் மீது மரச்சட்டத்தால் தாக்கியதில் ராமதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

குடி போதையில் தகராறு செய்த மகனைக் கொன்ற தந்தை சுப்புக்கண்ணுவை ஆலங்குடி போலிசார் கைது செய்துள்ளனர். ஆலங்குடி காவல் சரகத்திற்குள் ஒரே நாளில் 2 இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.