15 வயது சிறுமி முதல் இளம்பெண்கள் வரை… ஆபாச குற்றச்சாட்டுகளால் காவல்துறையை அதிர வைத்த ‘கான்ஸ்டபிள்’ மிகாவேல்!

Image symbolizing shocking allegations of sexual misconduct by constable Mikavel involving underage girls and young women.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பூவரசூர் பகுதியைச் சேர்ந்த மிகாவேல் (27) கடந்த 6 ஆண்டுகளாக காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தார். திருச்செந்தூர், ஆறுமுகநேரி, சென்னை சிட்டி உள்ளிட்ட இடங்களில் பணியாற்றிய இவர் மீது, 2020-ஆம் ஆண்டு தனது உறவுக்கார 15 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து பல இடமாற்றங்களும் ஆயுதப்படைக்கு மாற்றலும் நடந்தும், மிகாவேல் மீது தொடர்ந்து பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகாராகள் எழுந்து வந்தன.

அதாவது, குடும்ப பிரச்சினையில் காவல் நிலையம் வந்த இளம்பெண்களை உதவி செய்வதாக கூறி காதல் வலையில் சிக்கவைத்து, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய சம்பவங்களும் தற்போது வெளியாகி உள்ளன. இதில், மதுரை உயர்நீதிமன்றத்திலே வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், டி.என்.ஏ. பரிசோதனைக்கு கூட மிகாவேல் தவிர்த்து வந்தது தெரியவந்துள்ளது.

தான் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு சொந்த ஊருக்கு வந்த பிறகும், 2020-இல் பாலியல் தொந்தரவு செய்த அதே சிறுமியிடம் மீண்டும் அணுகியதால், சிறுமியின் குடும்பத்தினர் திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் விசாரணை செய்து, பாக்ஸோ சட்டத்தின் கீழ் மிகாவேலை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இது குறித்து போலீசார் தெரிவித்ததில், மிகாவேல் மீது இன்னும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்படும் நிலை உள்ளது. மேலும், டி.என்.ஏ. பரிசோதனை முடிவுகள் வந்தவுடன், அவரது மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் தீவிரமடையும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பல பெண்களின் நம்பிக்கையைக் கைவிட்டு பலத்த பாலியல் குற்றச்சாட்டுகளின் மூலமாக காவல்துறையே தலைகுனிய வைத்த மிகாவேலின் நடவடிக்கைகள், தற்போது தூத்துக்குடி காவல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.