
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் சாலையில் இயங்கி வரும் அரசு மருத்துவமனை, மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைக்காக கிராமப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சேவை செய்து வருகிறது. இங்கு மாதந்தோறும் 700க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெறும் நிலையில், 20க்கும் மேற்பட்ட படுக்கை அறைகள் கொண்ட வார்டு செயல்பட்டு வருகிறது.
ஆனால், இந்த வார்டில் பயன்பாட்டில் உள்ள படுக்கைகள் பெருமளவில் கிழிந்து சேதமடைந்து காணப்படுவதால், பிரசவித்த தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளை தரையில் படுக்க வைக்கும் அவலம் நடைபெற்று வருகிறது. இந்த சோகம் நிறைந்த காட்சி சமூக வலைதளங்களில் வீடியோவாக பரவ, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, மாவட்ட கலெக்டர் பிரசாந்த் நேற்று இரவு அரசு மருத்துவமனைக்கு சென்று நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடம் நேரில் பேசித் தேவைகளை கேட்டறிந்தார். சேதமான படுக்கைகள், மெத்தைகளை உடனே மாற்றி புதிய வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
இந்த சம்பவம், அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பு வசதிகள் குறித்து கேள்விகள் எழுப்பி, உடனடி நடவடிக்கை அவசியம் என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறது.