மதுபோதையில் ஆசிரியர் மீது பாட்டிலால் தாக்கிய மாணவர்கள் !

A group of students allegedly assaulted a school teacher with a bottle while under the influence of alcohol, prompting investigation.

திருத்தங்கலில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் நிலையில், சுந்தரமூர்த்தி என்பவர் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இன்று (16.07.2025) பிற்பகல் உணவு இடைவேளைக்கு பிறகு நால்வர் மதுபோதையில் பள்ளிக்கு வந்ததை பார்த்த ஆசிரியர் அவர்களை தட்டிக்கேட்டு, தலைமை ஆசிரியரிடம் அழைத்து சென்று கண்டித்தார்.

இதனால் கோபமடைந்த இரு மாணவர்கள், கையில் மறைத்து வைத்திருந்த மது பாட்டிலால் சுந்தரமூர்த்தியை தலையில் சரமாரியாக தாக்கினர். இதனால் படுகாயமடைந்த ஆசிரியர் உடனடியாக சக ஆசிரியர்களால் மீட்கப்பட்டு திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் போலீசாரால் பிடிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்ட விசாரணையில், கடந்த ஆண்டு செய்முறைத் தேர்வில் மதிப்பெண்களை குறைத்தது குறித்து பழிவாங்கும் நோக்கத்துடன் திட்டமிட்டே தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

ஒரே பள்ளியில் ஓராண்டுக்கு முன்பு மாணவர் ஒருவர் ஆசிரியரை அரிவாளால் வெட்டிய சம்பவமும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் மீண்டும் ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் பெற்றோர், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி மற்றும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.