
அறந்தாங்கி அருகே ஏகனிவயல் கிராமத்தைச் சேர்ந்த பர்வீன் பீவி (45) என்பவர், தனது இரு மகள்களுடன் காரணியேந்தல் கிராமத்தில் வசித்து வந்தார். வாழ்வாதாரமாக 4 மாடுகளை வளர்த்து வந்த அவர், கடந்த 14ம் தேதி மாலை மேய்ச்சலுக்கு விட்ட மாடுகளை தேடிச் செல்லும் போது காணாமல் போனார்.
நேரம்கடந்து வீட்டுக்கு வராததால் உறவினர்கள் ஆவுடையார்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்று காலை ஊரார் தேடிக்கொண்டிருக்கையில், வயல் பகுதியிலிருந்து கண்மாய் பகுதிக்குள் ஒருவர் இழுத்துச் செல்லப்பட்ட தடம் தெரிய வந்தது. அதன்படி கருங்குழிகாடு கண்மாய்க்குள் இறங்கி தேடியதில், துணி துவைக்கும் கற்களை கட்டி பர்வீன் பீவியின் உடல் தண்ணீரில் அமுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
நாகுடி போலீசார் உடலை மீட்டு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பர்வீன் பீவியின் செல்போன் காணாமல் போனதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மற்றும் டிஐஜி வருண்குமார் நேரில் ஆய்வு செய்து போலீசார் தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்காரர் கைது செய்யப்படும் வரை சடலத்தை பெற்றுக்கொள்ள முடியாது என உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், போலீசார் நடவடிக்கைகளை உறுதி அளித்தபின் சடலம் பெற்றுக் கொண்டனர்.
இந்த கொடூர கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.