அஸ்தம்பட்டி ரவுடி படுகொலை – 4 பேர் கைது, மேலும் 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு!

Four individuals have been arrested in connection with the murder of a known rowdy in Asthampatti.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மதன்குமார் عرف அப்பு, பல கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடியாக வலம் வந்தவர். ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த அவர், சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் நாள்தோறும் கையெழுத்திட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி நேற்று மனைவியுடன் கையெழுத்திட வந்த அவர், அருகிலுள்ள ஹோட்டலில் சாப்பிடச் சென்ற போது, இரு இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் ஹோட்டலுக்குள் புகுந்து, மனைவியின் கண்முன்னே மதன்குமாரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்த, அதனை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே தப்பியோடிய ஹரிபிரசாத், அந்தோணி, சந்தோஷ், சூர்யா ஆகிய நால்வரை திண்டுக்கல் மாவட்டத்தில் பதுங்கியிருந்த இடத்தில் சேலம் மாநகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் தலைமறைவாக இருக்கும் மற்ற இரண்டு பேரை கண்டுபிடிக்க கைது செய்யப்பட்ட நால்வரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் நிலையத்துக்கு 50 மீட்டர் அருகே நடந்த இந்த கொலை, சேலம் நகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.