
பென்னாகரம் அருகே அமைந்துள்ள ஒகேனக்கல் அருவி, தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டு முழுவதும் உள்ளூர் மற்றும் வெளிமாநில பயணிகள் பெருமளவில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் வருகின்றனர்.
காவிரி ஆற்றின் ராசிமணல் முதல் ஒகேனக்கல் வரை சுமார் 100-க்கும் மேற்பட்ட முதலைகள் பரவலாக வாழ்ந்து வருகின்றன. ஆற்றில் தண்ணீர் வற்றும் போது முதலைகள் கரையோரம் மணல் பகுதிகளில் ஓய்வு எடுக்கப்போவதும், வெள்ளப்பெருக்கு காலங்களில் வனப்பகுதிகளில் இருந்து முதலைகள் அடித்து வரப்படுவதும் வழக்கமாக உள்ளது.
சமீபத்தில் காவிரி ஆற்றில் விநாடிக்கு 70 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் அடித்து வரப்பட்ட முதலை ஒன்று தற்போது தண்ணீர் குறைந்ததால், ஒகேனக்கல் மீன் பண்ணை அருகே கரையோர மணல் பரப்பில் ஓய்வு எடுத்து கிடப்பதை சுற்றுலாப் பயணிகள் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கினர். இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து பரப்பி வருகின்றனர்.
இதையடுத்து வனத்துறையினர், முதலைகள் தோன்றும் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. மேலும் ஆற்றில் இருந்து வெளியே வரும் முதலைகளை மீட்டு, அருகிலுள்ள முதலை மறுவாழ்வு மையத்தில் விட வேண்டும் என வன உயிரியல் ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.