“குறைந்தபட்சம் தமிழில் கையெழுத்து போடுங்கள்” – தமிழ் நாட்டு தலைவர்களை விமர்சித்த பிரதமர் மோடி !!

“குறைந்தபட்சம் தமிழில் கையெழுத்து போடுங்கள்”- பிரதமர் மோடி

550 கோடியில் கட்டப்பட்ட பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைத்து, நாட்டுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி.

தாம்பரம்-ராமேஸ்வரம் இடையே இரயில் சேவையையும் தொடங்கி வைத்தார்.

8300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்குஅடிக்கல் நாட்டினார்.

இந்தியாவுடன் இராமேஸ்வர தீவை இணைக்கும் நூற்றாண்டு கடந்த பாம்பன் பாலத்திற்கு அருகே ரூ.550 கோடி மதிப்பில், 2 கிலோ மீட்டர் நீளம், கடல் மட்டத்திலிருந்து 15.5 மீட்டர் உயரம் கொண்ட புதிய இரயில் பால கட்டுமான பணிகள் கடந்தாண்டு இறுதியில் நிறைவடைந்தது.

இதன் பின் ரயில்வே அதிகாரிகள் பல கட்ட சோதனைகளை நடத்தி, ஏப். 6ம் தேதி பிரதமர் மோடியால் பாலம் திறந்து வைக்கப்படும் என அறிவித்தனர். இதையடுத்து கடந்த 5 நாட்களாகவே இதற்கான பணிகள் தீவிரமாயின. இராமேஸ்வரத்தில் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இலங்கைக்கு 2 நாட்கள் அரசு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, இவ்விழாவில் பங்கேற்பதற்காக நேற்று இலங்கை அனுராதபுரம் விமான நிலையத்திலிருந்து இந்திய ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பகல் 12.00 மணிக்கு மண்டபம் ஹெலிபேட் தளத்திற்கு வந்து இறங்கினார்.

பிரதமர் மோடியை தமிழ் நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழ் நாடு அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் வரவேற்றனர். அங்கு இருந்து காரின் மூலம் சாலை மார்க்கமாக நிகழ்ச்சி மேடைக்கு வந்த பிரதமருக்கு இரயில்வே நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையெடுத்து பாம்பன் புதிய இரயில் பாலத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர். தொடர்ந்து, பச்சை கொடியசைத்து இராமேஸ்வரம் – தாம்பரம் இடையிலான புதிய இரயில் சேவையையும் துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து இந்தியாவின் முதல் செங்குத்து தூக்குப்பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். தூக்குப்பாலம் மேலே உயர்ந்ததும், கால்வாய் வழியாக இந்திய கடலோர காவல் படையின் ரோந்து கப்பலில் வீரர்கள் தேசிய கொடியை அசைத்தபடி சென்றனர்.

இதன் பிறகு இராமேஸ்வரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற பிரதமருக்கு சாலை முழுவதும் மக்கள் உற்சாக வரவேற்பை கொடுத்தனர்.

பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் 8300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கள் நாட்டினார்.

பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர்,  திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசை விட தமிழ்நாட்டுக்கு அதிக நிதி தந்துள்ளோம். மேலும், கடந்த 10 ஆண்டுகளில் இரயில் திட்டங்களுக்காக தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஏழு மடங்கு அதிகரித்துள்ளது. இவற்றையெல்லாம் செய்த பின்னரும் சிலர் அழுதுகொண்டே இருக்கின்றனர். அவர்களால் அழ மட்டுமே தான் முடியும். அவர்கள் அழுது விட்டு போகட்டும்.” என்றார் மோடி

“தமிழ்நாட்டு தலைவர்களிடம் இருந்து வரும் கடிதங்களில் அவர்கள் யாருமே தமிழில் கையெழுத்து போடுவதில்லை. தமிழ் குறித்து நீங்கள் பெருமையாக உணர்ந்தால், குறைந்தபட்சம் தமிழில் கையெழுத்து போடுங்கள்” என்றார் மோடி.

மேலும், தமிழில் மருத்துவப் படிப்புகளை தொடங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திய மோடி, இதனால், ”ஏழை குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளின் மருத்துவ கனவு நனவாகும்” என்றார். பொதுக்கூட்டம் முடிந்த பிறகு இராணுவ ஹெலிகாஃப்டர் மூலம் மதுரை சென்ற பிரதமர், அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.