
சென்னை வியாசர்பாடி எம்கேபி நகரைச் சேர்ந்த சங்கர் (20), கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடினார். கேக் வெட்டி கொண்டாடிய பிறகு நண்பர்கள் மது விருந்து வைக்குமாறு சங்கரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதற்காக மெத்தம்பெட்டமைன் வாங்க சங்கர் மற்றும் அவரது நண்பர் தீபக் ஆகிய இருவரும் நித்தின் குமாரை என்பரை சந்தித்து 2,500 ரூபாய் கொடுத்து மெத்தம்பெட்டமைன் எனும் போதை பொருள் கேட்டுள்ளனர்.
அப்போது நித்தின் குமார், கந்தா என்பவரை நாடி போதைப் பொருள் வாங்க ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் கந்தா என்பவர், மெத்தம்பெட்டமைன் பதிலாக அஜினோமோட்டோவை வாங்கிக் கொடுத்து இவர்களை ஏமாற்றியுள்ளார்
இது தெரிய வந்ததால் பணம் கொடுத்த சங்கர், இரவு மது விருந்தின் போது நித்தின் குமார் மற்றும் ஸ்டீபன் ராஜ் ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த நண்பர்கள், பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்த பின் சங்கரை ஓட ஓட விரட்டி, எருக்கஞ்சேரியில் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி, 16 வயது சிறுவன் உட்பட லிங்கேஸ்வரன், நித்தின் குமார், ஸ்டீபன் ராஜ் உள்ளிட்ட 7 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நான்கு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த கொடூர கொலை சம்பவம் வியாசர்பாடி மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.