
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே மண்டலநாயக்கம் ஊராட்சி பத்ரிக்கானூரைச் சேர்ந்த ராஜ்குமார் – முத்துலட்சுமி தம்பதியினர், ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகளுக்கு பெற்றோராக உள்ளனர். ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையுடன் நான்காவது குழந்தையை பெற்றெடுத்த நிலையில், மீண்டும் பெண் குழந்தை பிறந்தது.
கஜல்நாயக்கன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு தொடர்பான சிகிச்சை பெற்று வந்த தம்பதியினருக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தை உடல்நிலை பாதிப்பால் கடந்த மாதம் 18ம் தேதி இறந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மருத்துவ சிகிச்சை கோளாறு காரணமாக குழந்தை இறந்ததாக பெற்றோர் குற்றஞ்சாட்டியிருந்தனர். ஆனால், ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் இருப்பதால் நான்காவது குழந்தையை பெற்றோர் கொன்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் உஷாதேவி கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் வட்டாட்சியர் நவநீதம், பிரேத பரிசோதனை நிபுணர் பாலாஜி தலைமையிலான குழு மற்றும் போலீசார் இணைந்து 11 மாத குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தடய அறிவியல் ஆய்வு கூடத்திற்கு மாதிரிகள் அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.