
சென்னை புழல் பகுதியைச் சேர்ந்த பாபு, இவரது மனைவி சங்கீதா சென்னை மாநகராட்சி 31-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவர் குடும்பத்துடன் பொன்னேரி அருகே சிங்கிலிமேடு கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சமீபத்தில் சென்றிருந்தார். அப்போது பொன்னேரியில் உள்ள தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து குடிநீர் பாட்டில்களை வாங்கியுள்ளனர்.
பின்னர் கோவில் வளாகத்தில் உணவு அருந்தியபோது பாட்டிலில் இருந்து தண்ணீர் எடுக்க முயன்றபோது அதில் இறந்த பல்லி ஒன்று இருப்பது தெரிய வந்தது. இது குறித்து உடனே ஆலைய ஊழியர்களிடம் வினவிய போது, அவர்கள் சரியான விளக்கம் தரவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து அதே பகுதியில் ஏராளமானோர் கூடி அந்த குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று போராட்டக்காரர்களுடன் பேசிப் பதற்றத்தை குறைத்தனர். மேலும் இந்த குற்றச்சாட்டை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்க பொதுமக்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.