
கன்னடத்து பைங்கிளி என்று மக்களின் இதயத்தில் இடம் பிடித்திருந்த பழம்பெரும் நடிகை பி.சரோஜா தேவி இன்று (ஜூலை 14) பெங்களூருவில் உயிரிழந்தார். வயது மூப்பு காரணமான உடல்நலக் குறைவால் சில காலமாக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலமானாதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
1955 ஆம் ஆண்டு ‘மகாகவி காளிதாஸா’ என்ற கன்னட திரைப்படம் மூலம் திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்கிய சரோஜா தேவி, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கும் நடிகையாக திகழ்ந்தார்.
தமிழில் எம்.ஜி.ஆருடன் மட்டும் அன்பே வா, நாடோடி மன்னன், எங்கள் வீட்டு பிள்ளை உள்ளிட்ட 26 படங்களில் நடித்தார். சிவாஜி கணேசனுடன் புதிய பறவை, சபாஷ் மீனா உள்ளிட்ட 22 படங்களிலும், ஜெமினி கணேசனுடன் கல்யாண பரிசு, கைராசி உள்ளிட்ட 17 படங்களிலும் நடித்துள்ளார்.
காலந்தோறும் தனது அழகு, நடிப்பு, நடன திறமையால் திரையுலகில் தனி இடம் பிடித்த அவர், விஜயகாந்துடன் பொன்மனச் செல்வன், விஜயுடன் ஒன்ஸ் மோர், சூர்யாவுடன் ஆதவன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இந்தியில் ராஜ் கபூர், ஷம்மி கபூர் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தவர்.
மேலும் பத்மஸ்ரீ, பத்ம பூஷண் விருதுகளை பெற்றுள்ள அபிநய சரஸ்வதியின் மறைவு திரையுலகையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரையுலகின் பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.