தனியார் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – கார் ஓட்டுநர் உட்பட 3 பேர் கைது!

"Three, including a car driver, arrested for sexually harassing 18 minor girls in a private shelter home"


செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் இயங்கும் தனியார் சிறுமிகள் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காப்பகத்தில் பெற்றோரை இழந்த 40 சிறுமிகள் தங்கிக் கல்வி பயின்று வருகின்றனர். காப்பக உரிமையாளர் அருள்தாஸ் மற்றும் அவரது மகள் பிரியா இயக்கி வந்த இந்த விடுதியில், உரிமையாளரின் கார் ஓட்டுநர் பழனி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி பலமுறை சிறுமிகள் அருள்தாசிடம் கூறியிருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து மாவட்ட குழந்தை நல அலுவலர்கள் ஆய்வின்போது பாதிக்கப்பட்ட சிறுமிகள் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல்நிலையம் போலீசார் கார் ஓட்டுநர் பழனியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அதேபோல் சிறுமிகள் புகாரை மறைத்ததாக உரிமையாளர் அருள்தாஸ் மற்றும் அவரது மகள் பிரியாவும் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில் அருள்தாஸுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரியா மற்றும் பழனியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காப்பகத்தில் உள்ள மற்ற சிறுமிகளுக்கும் இதுபோன்ற தொல்லை ஏற்பட்டுள்ளதா என விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் வண்டலூர் பகுதிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.