
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே திருவேங்கப்புடையான்பட்டி கிராமத்தை சேர்ந்த மூன்று பள்ளி மாணவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனகராஜ் என்பவரின் மகன் மாதவன் (10), செந்திலின் மகன் பாலமுருகன் (10) மற்றும் ஸ்ரீதர் மகன் ஜஸ்வந்த் (8) ஆகிய மூவரும் அக்கிராம அரசு தொடக்கப்பள்ளியில் 5-ம் மற்றும் 3-ம் வகுப்பு படித்து வந்தனர்.
நேற்று மருதகுடி கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவுக்காக மக்கள் குடும்பத்துடன் சென்றிருந்தனர். அந்த நேரத்தில் 3 சிறுவர்களும் அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றனர். நீச்சல் தெரியாத மூவரும் குளத்தின் ஆழமான பகுதியில் மூழ்கி உயிரிழந்தனர்.
பெரியவர்கள் தேடி பார்த்தபோது, குளத்துக்கரையில் அவர்களின் உடைகள் கிடைத்ததைக் கண்டு கிராம மக்கள் உடனே குளத்தில் இறங்கி தேடி மூவரையும் மீட்டனர். ஆனால், தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது டாக்டர்கள் மூவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூன்று சிறுவர்களின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.