
காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூர் ஊராட்சியில் நல்லூரைச் சேர்ந்த துளசிராமன், அவரது மனைவி சுமதி மற்றும் அவரது இரு சகோதரர்கள் சுப்பிரமணி, ஏழுமலை ஆகியோர், ஏரிக்கரையில் உள்ள தங்களது சொந்த இடங்களில் வீடுகளைக் கட்டி அருகருகே வசித்து வந்தனர்.
சுப்பிரமணியின் மூன்றாவது மகன் துரை, ஏரிக்குச் சொந்தமான இடத்தில் கால்நடை கொட்டகை கட்டியுள்ளார். அதேபோல், இளைய சகோதரரான ஏழுமலையும் அந்த இடத்தில் குளியலறை கட்ட முயன்றார். இதனை துரை தடுத்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, துளசிராமன் மற்றும் அவரது மனைவி சுமதி, வீட்டிற்கு எதிரே உள்ள அதே ஏரிக்கரையில் மாட்டு கொட்டகை அமைக்க முயன்ற போது, துரை அவர்களையும் கட்ட அனுமதிக்காமல் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், 9ம் தேதி காலை சுமதி வீட்டின் அருகே நின்றிருந்த போது, திடீரென வந்த துரை, சுமதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் ஆத்திரமடைந்த துரை, தான் வைத்திருந்த கத்தியை எடுத்து சுமதியின் தலையில் பலமுறை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார்.
சுமதியை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார், சுமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், துரையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.