
ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த நான்கு மாத கர்ப்பிணி, திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். பிப்ரவரி 7ஆம் தேதி கோயம்புத்தூர்-திருப்பதி இன்டர்சிட்டி விரைவு ரயிலில் சொந்த ஊருக்குச் செல்வதற்காக அவர் பயணம் செய்தார்.
மகளிர் பெட்டியில் யாரும் இல்லாததை பார்த்த ஹேமராஜ், கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அவ்வாறு துன்புறுத்தியதில் அவர் கத்திக் கூச்சலிட்ட நிலையில், கையை உடைத்து ஓடும் ரயிலிலிருந்து கீழே தள்ளியுள்ளார்
இதனால் தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்ட கர்ப்பிணி, ரயில்வே காவல்துறையால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் ஹேமராஜ் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்த ரயில்வே போலீசார், விசாரணை மேற்கொண்டனர். வழக்கு விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், திருப்பத்தூர் மாவட்ட நீதிபதி மீனாகுமாரி ஹேமராஜ் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளார்.
ஹேமராஜுக்கு விதிக்கப்படும் தண்டனை ஜூலை 14ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.