
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பரமநகர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்தார். அதில் ஒரு ஆடு வடகாடு முத்துமாரியம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டது. நேற்று காலை 9.28 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அந்த ஆட்டுக் கிடாயை தூக்கி பைக்கில் வைத்துக் கொண்டு கடத்திச் சென்றனர்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியதால் ராஜேந்திரன் வடகாடு போலீசில் புகார் கொடுத்தார். சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், மழையூர் காவல் சரகம் பொன்னன்விடுதி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மற்றும் ராமராஜன் ஆகிய இருவரையும் அடையாளம் கண்டு கைது செய்தனர்.
வடகாட்டில் புதிதாக வந்ததால் சாலை தெரியாமல் வழிதப்பிய அவர்கள், ஒரு வீட்டிடம் பைக்கை நிறுத்தி வடகாடு எப்படி போகலாம் என்று வழி கேட்ட போது அங்கிருந்த சிசிடிவியில் சிக்கிக் கொண்டனர். அதன் அடிப்படையில் போலீசார் அவர்களை பிடித்து, திருடிய ஆட்டை மீட்டு விவசாயி ராஜேந்திரனிடம் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பேச்சுப்பொருளாகியுள்ளது.