டி.எஸ்.பி. திட்டியதால் பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி!

"Woman police officer attempts suicide after being reprimanded by DSP"

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அனுமந்தபுரம் குடில் தெருவைச் சேர்ந்த லட்சுமி, மூலனூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். கரூர் அரவக்குறிச்சியைச் சேர்ந்த கவின்குமார், மூலனூர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த போது, அவருக்கும் லட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் கவின்குமார் திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் லட்சுமி மீது புகார் அளித்தார். அதை விசாரித்த டி.எஸ்.பி. சுரேஷ்குமார், தலைமைக் காவலர் லட்சுமியை விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

அதன்படி இன்று லட்சுமி அலுவலகத்தில் ஆஜரானபோது, டி.எஸ்.பி. அவரை கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. மேலும், ‘கழுத்துல ருத்ராட்ச கொட்ட, நெத்தில பட்ட போட்டுக்கிட்டு சாமியார் மாதிரி இருக்கிறாயே…’ என அவமானப்படுத்தினார் என தெரிவிக்கப்படுகிறது.

இதனால் மனமுடைந்த லட்சுமி அலுவலகத்தில் இருந்த கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக மற்ற காவலர்கள் அவரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவம் போலீசார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், சம்பந்தப்பட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.