வக்ஃப் திருத்த மசோதா கடந்து வந்த பாதை !!

வக்ஃப் திருத்த மசோதா கடந்து வந்த பாதை

வக்ஃப் (Waqf) என்பது இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் அமைந்த ஒரு அமைப்பு ஆகும்.

வக்ஃப் என்பது இஸ்லாம் நபர் ஒருவர், தனது சொத்துகளை இறைவனுக்கு கொடையாக வழங்கும் நடைமுறை ஆகும். இந்த சொத்துக்கள் பள்ளிவாசல், பள்ளிக்கூடம்,மருத்துவம் போன்ற சமூக சேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்த முடியும்.

ஒரு முறை இந்த சொத்தை கொடுத்துவிட்டால் அதை மீண்டும் விற்கவோ , சொந்தமாக வைத்துக்கொள்ளவோ முடியாது.  இந்த சொத்துகளை நிர்வகிப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் வக்ஃப் வாரியம். இது இஸ்லாம் சமூக நலத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு மதப்பண்பாட்டு அமைப்பு ஆகும்.

வக்ஃப் சொத்துக்களைக் கண்காணிப்பது அரசின் கடமை என்று கருதி 1995ஆம் ஆண்டு வக்ஃப் சட்டம் (Waqf Act, 1995) நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இந்த சட்ட விதிகளின் படி, இன்று வரை வக்ஃப் சொத்துகளை கண்காணித்து நிர்வகித்து  வருகிறது வக்ஃப் வாரியம்.

இந்த நிலையில், வக்ஃப் வாரியத்தின் நிர்வாக செயல்திறனை மேம்படுத்தவும், வக்ஃப் வாரியம் தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டியது அவசியம் என்று கூறி, அதற்கான மசோதாவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த மசோதாவுக்கு திமுக,காங்கிரஸ், உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அவர்களது எதிர்ப்பை தொடர்ந்து, இந்த மசோதா ஜகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்ற கூட்டு குழுவுக்கு அனுப்பி   வைக்கப்பட்டது. இந்த கூட்டுக் குழுவில் எதிர்க்கட்சி எம்பிகள் உட்பட 31 நபர்கள் இடம் பெற்றனர்.

கூட்டுக் குழுவில் மசோதாவின் மீது பல கட்டமாக விவாதம் நடத்தப்பட்டு, பல்வேறு திருத்தங்கள் முன்வைக்கப்பட்டது, இதையெடுத்து முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதலும் வழங்கியது.

இதையெடுத்து 44 திருத்தங்களுடன் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை ஏப்ரல் 02 ஆம் தேதி அன்று ஒன்றிய சிறுபான்மை துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மக்களைவையில் தாக்கல் செய்தார்.

12 மணி நேர விவாதத்திற்கு பிறகு அதிகாலை 1:57 மணியளவில் மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதாவிற்கு 288 வாக்குகள் ஆதரவாகவும்,232 வாக்குகள் எதிராகவும் பதிவானது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மக்களவை போலவே இங்கும் பல மணி நேரம் விவாதம் தொடர்ந்தது. இறுதியில் மசோதவிற்கு ஆதரவாக 128 வாக்குகளும், எதிராக 95 வாக்குகளும் பதிவானதால் ,மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது. தற்போது குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த பிறகு இந்த மசோதா சட்ட வடிவமாக நடைமுறைக்கு வரும்.

இந்நிலையில் மசோதவை எதிர்த்து பல்வேறு அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழ் நாடு அரசு ஏற்கனவே இந்த மசோதவை திரும்ப பெற வலியுறுத்தி சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் நிறைவேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது உச்ச நீதிமன்றத்திலும் இந்த மசோதவை எதிர்த்து வழக்கு தொடர்ந்து உள்ளது தமிழ் நாடு அரசு.