
சென்னை மாதவரம் ஜவஹர்லால் நேரு நெடுஞ்சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் நவீன் (27) என்பவர் அக்கவுண்ட்ஸ் பிரிவில் பணியாற்றி வந்தார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர், வரவு செலவுகளை கண்காணித்து வந்தார். அண்மையில் நிறுவனம் நடத்திய சோதனையின்போது ரூ.40 கோடி வரை மோசடி நடந்துள்ளது தெரியவந்தது.
நிறுவன விசாரணையில் நவீன் தான் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததால், அதைப் பற்றி கேட்டபோது அவர் பண மோசடியை ஒப்புக் கொண்டார். பணத்தை விரைவில் திருப்பி தருவதாகவும் கூறியுள்ளார். ஆனால் பணத்தை திருப்பி தர முடியாத நிலையில், புழல் அருகே கதிர்வேடு பிரிட்டானியா நகர் பகுதியில் தான் வாங்கியிருந்த இடத்தில் குடிசையில் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன் ஆந்திராவில் இருக்கும் சகோதரிகளுக்கு ஈமெயில் அனுப்பியுள்ளார். ஈமெயில் கிடைத்ததும் அவரது சகோதரிகள் சென்னை வந்தபோது தம்பி இறந்ததை தெரிந்து அதிர்ச்சியடைந்தனர்.
அவர் குடும்பத்தினர் புழல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நவீனின் உடலை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.