
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நெல்லை மண்டல மதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் ஜூலை 9-ஆம் தேதி நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோ முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் நெல்லை மண்டலத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
வைகோ பேசும்போது சிலர் வெளியே சென்றதாக கூறப்படுகிறது. இதனை செய்தியாளர்கள் செய்தியாக பதிவு செய்ததை பார்த்த வைகோ, செய்தியாளர்களை வெளியேற்ற உத்தரவிட்டார். கட்சி நிர்வாகிகள் செய்தியாளர்களை வெளியேற்றும் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதில் இரு பத்திரிகையாளர்கள் காயமடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் தாக்கப்பட்டதை அடுத்து பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊடகவியலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் துரை வைகோ செய்தியாளர்களிடம் வருத்தம் தெரிவித்தார். “மூன்றாயிரம் பேர் கூட்டத்தில் இருந்தனர். மின்சாரம் தடைபட்ட போது சிலர் வெளியே சென்றனர். அதை ஒளிப்பதிவு செய்ததால் சில தொண்டர்கள் ஆத்திரமடைந்து ஊடகவியலாளர்களை தாக்கி விட்டனர் . மறுமலர்ச்சி திமுக வரலாற்றில் இது போன்ற சம்பவம் நடந்ததே இல்லையெனவும், நடந்த சம்பவத்திற்கு தனிப்பட்ட முறையிலும் கட்சியின் சார்பிலும் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என துரை வைகோ தெரிவித்துள்ளார்.