
செங்குறிச்சியைச் சேர்ந்த பிரவீண்குமார் என்பவர் கட்டிட மின் வயரிங் தொழிலாளி. மணிகண்டம் மேக்குடி கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவருக்கு வீடு கட்டுவதற்காக தற்காலிக மின் இணைப்பு பெற அவர் விண்ணப்பித்தார். இதற்காக திருச்சி மணிகண்டம் மின்வாரிய அலுவலக வணிக ஆய்வாளர் அருளானந்தத்தை அணுகிய போது, கடந்த 8-ம் தேதி அவர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பிரவீண்குமார் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் கொடுத்தார். அதன் பேரில் துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில், ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ், சேவியர்ராணி மற்றும் போலீசார் திட்டமிட்டு நடவடிக்கை எடுத்தனர்.
பரவீண்குமாரிடமிருந்து ரூ.10 ஆயிரம் லஞ்சத்தை வாங்கும் போது வணிக ஆய்வாளர் அருளானந்தம் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். இதுகுறித்து திருச்சி மணிகண்டம் மின்வாரிய அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.