
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்பு அறிவித்திருந்ததை போல உலக நாடுகள் மீது பரஸ்பர வரியை அதிரடியாக அறிவித்துள்ளார்.
ஏப்ரல் 2 ம் தேதி பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று இந்த மாத தொடக்கத்திலிருந்தே டிரம்ப் கூறி வந்தார்
மேலும் அது அமெரிக்காவின் பொருளாதார விடுதலை நாளாக அமையும் எனவும் அவர் கூறினார்.
ஒரு நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு அந்த நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு இணையாக அமெரிக்காவும் பதிலடி கொடுக்கும் வகையில் வரிகளை மாற்றி அமைக்கும் எனவும் டிரம்ப் கூறினார்
இன்று அதற்கேற்றாற்போல இந்திய நேரப்படி காலை 1 மணி அளவில் உலக நாடுகள் மீது பரஸ்பர வரியை அறிவித்து உலக நாடுகளை அதிர்ந்துபோக வைத்துள்ளார்
வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் வைத்து ரெசிப்ரோக்கல் எனும் புதிய வரி விதிப்பு முறையை அமுல்படுத்தி உரையாற்றும் போது டிரம்ப் எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு சதவீத வரி விதிக்கப்படுகின்றது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
அதன்படி, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 26% வரி விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடியை பிப்ரவரி மாதம் சந்திததாகவும் அவர் எனது நல்ல நண்பர் என பாராட்டியதோடு, இந்தியா 52 சதவீத வரி விதித்தாலும் நாம் அதில் பாதியை மட்டுமே விதித்துள்ளதாகவும் விளக்க மொன்றையும் வழங்கியிருந்தார்.
இந்தியா மட்டும் இல்லாமல் பல்வேறு நாடுகளுக்கும் அமெரிக்கா கடுமையான வரி விதித்துள்ளது. குறிப்பாக, சீனாவுக்கு 32%, கம்போடியாவுக்கு 49%, வியட்நாமுக்கு 46%, இலங்கைக்கு 44% என வரி விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவில் தயாரிக்கப்படாமல், அந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீது 25% வரி விதிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் இந்த அறிவிப்புக்கள் சர்வதேச வர்த்தகத்துறையில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
பொருளாதார வல்லுனர்கள், இதனால் உலகளாவிய அளவில் வர்த்தக போர் வெடிக்கும் அபாயம் நிலவுவதாகவும், பொருளாதார நிலைத்தன்மை பாதிக்கப்படும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, “அமெரிக்கா புதிதாக அறிவித்துள்ள பரஸ்பர வரி விதிப்பு முறை தவறானது. இது வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும். அத்தோடு பொருளாதார போர் என்பது மேற்கு நாடுகளை பலவீனப்படுத்தி விடும் என தெரிவித்துள்ளார்
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புக்கு தகுந்த பதில் நடவடிக்கை கொடுப்போம். அதற்கு எதிர்த்து நிற்போம் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
மேலும், ஆஸ்திரேலியா, பிரிட்டன், சுவிட்சர்லாந்து, அயர்லாந்து நாடுகளும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.
இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், இதன் விளைவுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என பல்வேறு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.