
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள தேனூர் கோவில்பாளையத்தில் ஐயனார், பூரணி, புஸ்காலமிகை, கருப்பையா, மாரியம்மன், முருகன், செல்லியம்மன், விநாயகர் உள்ளிட்டதெய்வங்களை உள்ளடக்கிய பிரசத்திபெற்ற கோவில்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் நடைபெறும் திருவிழா பெரும் சிறப்புடன் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 8 நாட்களுக்கு முன்பு காப்புக் கட்டுடன் தொடங்கி, தினசரி அபிஷேகம், அலங்காரம், ஆராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் முழுவீச்சில் நடந்தன. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டு வந்தனர்.
இந்த நிலையில், திருவிழாவின் 8-ஆம் நாளான இன்று (ஜூலை 8) தேர்த் திருவிழா நடைபெற்று வந்தது. தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றபோது தேரின் அச்சு திடீரென முறிந்ததாக கூறப்படுகிறது. இதனால் தேரின் அலங்கார கோபுர பகுதி அடுத்த தேரின் மீது சரிந்து விழுந்தது.
அப்போது பக்தர்கள் அலறி ஓடி தங்களை பாதுகாத்தனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்துக்குப் பிறகு தேரை திருத்தி மீண்டும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர்த் திருவிழா நடைபெறும் இடத்தில் அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது