
பட்டபகலில் அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்த செயின் பறிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அருகே வானகரம் பகுதியிலுள்ள வீடொன்றின் கதவைத் தட்டி , பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச் செயினை பறித்து விட்டு தப்பியோடிய நபரொருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது
அந்த வீடியோவில், சந்தேக நபர் முதலில் குடியிருப்புக்குள் நுழைந்து, வீட்டின் காலிங் பெல்லை அழுத்துகிறார்.
கதவு திறக்கப்பட்டவுடன், அங்கு இருந்த பெண்ணுடன் சில நொடிகள் பேசிக்கொண்டிருந்த பின்னர் அவரை தாக்கி விட்டு வீட்டுக்குள்ளே நுழைந்து, அந்த பெண்ணின் கழுத்திலிருந்த செயினை பறித்துவிட்டு தப்பிச் செல்கிறார்.
இந்த வீடியோவை பார்த்த குடியிருப்பில் வசிப்போர் மட்டுமல்லாமல், சமூக வலைதள பயனர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
சம்பவத்துக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்பட்டுள்ளது
இந்த செயின் பறிப்பு சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், அவர்கள் உடனடியாக விசாரணையை ஆரம்பித்து, குற்றத்தில் ஈடுபட்ட சதீஷ் என்ற இளைஞரை கைது செய்துள்ளனர்
அண்மையில் சென்னையில் அதிகாலையில் நடந்த செயின் பறிப்பு சம்பவமும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.
வடமாநிலக் கொள்ளையர்கள், விமானம் மூலம் வந்து செயின் கொள்ளையில் ஈடுபட்ட பின்னர் , மீண்டும் தப்பிச் செல்ல முயன்றபோது விமான நிலையத்திலேயே போலீசார் அவர்களை கைது செய்தனர். இதேபோல், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி நடக்கும் செயின் பறிப்பு மற்றும் கொள்ளை சம்பவங்கள் மக்களிடையே பயத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது பட்ட பகலில் வீட்டின் கதவை தட்டி கொள்ளையிட முயன்ற இந்த சம்பவம் மக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.