
சென்னையில் நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 23ம் தேதி, நடிகர் கிருஷ்ணா 26ம் தேதி போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இதையடுத்து இருவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் அந்த மனு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது தள்ளுபடி செய்யப்பட்டது.
ஜாமீன் கோரிய மனு மறுக்கப்பட்ட நிலையில், ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையில் நீதிபதி, இருவருக்கும் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
அதன்படி, இன்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்க உத்தரவிட்டுள்ளது. ரூ.10 ஆயிரம் சொந்த ஜாமீன் மற்றும் அதே தொகைக்கு இருநபர்கள் ஜாமீன் அளிக்க வேண்டும் எனவும், விசாரணை அதிகாரி முன்பாக இருவரும் முறையாக ஆஜராகி கையெழுத்திட்டு வர வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.