
மேற்கு தொடர்ச்சி மலைகள் சூழ்ந்த நீலகிரி வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கைகளை எடுத்து வரும் இந்நிலையில் கடந்த இரவு, கட்டப்பெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட, அளக்கரை ரேலியா பகுதியில் வனச்சரகர் சீனிவாசன் தலைமையில் இரவு ரோந்து பணி நடைபெற்றது.
ரோந்து பணியின்போது கேரளா பதிவு எண் கொண்ட ஒரு ஜீப்பினை சோதனை செய்தபோது வாகனத்தில் இருந்து உரிமம் இல்லாத ரைபிள் துப்பாக்கி மற்றும் அதன் தோட்டாக்கள், ஏர் கன் வகை துப்பாக்கிகள் 4 மற்றும் அவற்றின் தோட்டாக்கள், கடமான் கொம்பு இணை 2 ஜோடிகள், வெளிமான் கொம்புகள் மற்றும் டார்ச் லைட்டுகள் போன்ற வேட்டைக்கு பயன்படும் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் வாகனத்தையும், வாகனத்தில் இருந்த கர்நாடகாவைச் சேர்ந்த சூர்யகுமார் (27), ரேகன் அட்சயா (28), அக்ஷய் (28), விக்னேஷ் (29) மற்றும் அனுஷ்கா (23) என்ற இளம்பெண் உள்ளிட்ட ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இவர்கள் இதற்கு முன் எத்தனை முறை வேட்டையில் ஈடுபட்டனர், கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது, என்ற கோணங்களில் மாவட்ட வன அலுவலர் கௌதம் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகின்றது.