
2019 ஆம் ஆண்டு பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர் மற்றும் டோவினோ தாமஸ் ஆகியோர் நடித்து வெளியான லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றாலும், ஒரு தரப்பில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
படத்தின் துவக்கத்தில் வரும் 15 நிமிட காட்சிகளில் பல இஸ்லாமியர்கள் கொல்லப்படுவதாக காட்டப்படுகிறது. இது 2002ல் நடைபெற்ற கோத்ரா கலவரத்தை பிரதிபலிப்பதாக வலதுசாரி அமைப்பினர் கூறுகின்றனர். மேலும் பில்கிஸ் பானு வழக்கை நினைவுபடுத்தும் வகையிலும் இருப்பதாகவும் பலர் சுட்டிக்காட்டினர்.
படத்தில் வில்லனின் பெயர் பாபா பஜ்ரங்கி எனக் குறிப்பிடப்படுகிறது. இந்தப் பெயர் நரோடா படியா படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பாபு பஜ்ரங்கியின் பெயருக்கு நெருக்கமாக இருந்ததையும் பலர் சுட்டிக்காட்டி உள்ளனர்.
ஆஎஸ்எஸ்-ன் இதழான ஆர்கனைஸர் இந்த படத்தைக் கடுமையாக விமர்சித்தது. மேலும் தேச விரோத மற்றும் இந்து விரோத கருத்துக்களை வேண்டுமென்று திணிக்க திட்டமிட்டு, இத்தகைய கதையை உருவாக்கி உள்ளனர் என ஆர்கனைஸர் குறிப்பிட்டது.
இதனை தொடர்ந்து பல்வேறு இந்து அமைப்பினர் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். கேரள பாஜக மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர்,எம்புரான் படத்தின் இயக்குநர் மற்றும் மோகன்லால் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் படத்தை பார்க்க ஆவலுடன் உள்ளதாகவும் கூறினார். ஆனால், படம் வெளியானதும் அவரது கருத்துக்காக கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார். இதையடுத்து தன்னுடைய முந்தைய கருத்திலிருந்து பின்வாங்கி, அந்தப் படத்தைப் பார்க்கப் போவதில்லை எனத் தெரிவித்தார்.
வலது சாரி அமைப்புகள் இந்த படத்தை கடுமையாக விமர்சித்தாலும், கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இந்த படத்தை ஆதரிப்பதாக கருத்து தெரிவித்தனர்,
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் எம்புரான் படத்திற்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்தார். மேலும் “எம்புரான் படத்திற்கும் அதன் படைப்பாளிகளுக்கும் எதிராக செய்யப்படும் வகுப்புவாத பிரசாரம் கவலையளிக்கிறது. என்றும் தெரிவித்தார்.
இதையெடுத்து படத்தின் நாயகன் மோகன்லால் இந்த திரைப்படம் தொடர்பாக வருத்தம் தெரிவித்தார். மேலும் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படுவதாகவும் அறிவித்தார்.
ஒரு கலைஞனாக என்னுடைய எந்த படமும் எந்த ஒரு அரசியல் இயக்கம் சார்ந்தோ அல்லது ஒரு பிரிவினர் மீது வெறுப்புணர்வை கொண்டிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துவது எனது கடமை என்றார் . ஏற்பட்ட துயரத்திற்காக நானும் ‘எம்புரான்’ குழுவினரும் உண்மையிலேயே மனம் வருந்துகிறோம். எனவும் கூறினார். இதையெடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு எல்லா இடங்களிலும் படம் மீண்டும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படத்தின் மூன்றாம் பாகம் தி பிகினிங்(THE BEGINNING ) என்ற தலைப்பில் வெளியாகும் எனவும் அறிவித்தனர்.