
பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில், வக்ஃப் வாரிய திருத்த மசோதா மக்களவையில் நேற்று (02/04/2025) தாக்கல் செய்தார் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு. மேலும் இந்த மசோதா குறித்து விவாதிக்க 8 மணி நேரம் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அவர்களது எதிர்ப்பை தொடர்ந்து, மசோதா ஜகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்ற கூட்டு குழுவுக்கு அனுப்பி 0வைக்கப்பட்டது. இந்த கூட்டுக் குழுவில் எதிர்க்கட்சிகள் உட்பட 31 நபர்கள் இடம் பெற்றனர்.
கூட்டுக் குழுவில் மசோதாவின் மீது பல்வேறு கட்டமாக விவாதம் நடத்தப்பட்டது, இதில் சில திருத்தங்கள் முன்வைக்கப்பட்டது, இதையெடுத்து முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதலும் வழங்கியது.
44 திருத்தங்களுடன் வக்பு வாரிய மசோதாவை விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
- தணிக்கை அதிகாரம் மாநில அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு மாற்றம் செய்யப்படும்.
- 6 மாதங்களுக்கு ஒரு முறை வக்ஃபு சொத்துகள் மீதான வருவாய் விவரங்களை தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்காவிட்டல் நடவடிக்கை எடுக்கப்படும்.
- மாநில மற்றும் மத்திய வக்ஃப் வாரியங்களில் இஸ்லாமியர்கள் அல்லாத 2 உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள். மேலும் பெண்களும் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவார்கள்.
- வக்ஃபு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மாவட்ட நீதிபதி தலைவராகவும், மாநில அரசின் இணை செயலாளர் உறுப்பினராகவும் செயல்படுவார்.
- 5ஆண்டுகளுக்கு மேல் இஸ்லாம் மதத்தை பின்பற்றுவோர் மட்டுமே வக்ஃப் வாரியத்திற்கு நன்கொடையை வழங்க முடியும்.
- வக்ஃபு வாரிய சொத்துகளின் தரவுகள், பதிவுகள், தணிக்கை விபரங்கள், மற்றும் புகார்கள் வழக்குகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களை வெளியிட டிஜிட்டல் இணையதளம் உருவாக்கப்படும். என்பன உள்ளிட்ட பல்வேறு திருத்தங்கள் இந்த மசோதாவில் செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்த திருத்த மசோதா மக்களவையில் தாக்கலாக இருக்கும் நிலையில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும் நாடளுமன்றத்தில் இந்த மசோதாவிற்கு எதிராக வாக்களிக்கவும் முடிவு செய்துள்ளனர். அதே போல் பாஜக கூட்டணி கட்சிகளும் இந்த மசோதாவை இந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலே செயல்படுத்த வேண்டும் என்ற முணைப்பில் உள்ளது.இதனால் அனைத்து உருப்பினர்களும் கட்டாயம் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள பாஜக தலைமை அறிவுறுத்தியுள்ளது.