
கோவை புறவழிச் சாலையில் தனிப்பிரிவு காவலர் பார்த்திபன், நேற்று நள்ளிரவு தனது மனைவியுடன் காரில் சென்ற கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் திடீரென காரை வழிமறித்து நிறுத்தினர்.
காரை நிறுத்திய பார்த்திபனை, தங்களிடம் இருந்த கூர்மையான ஆயுதத்தால் தாக்கி தலையில் வெட்டினர். அதையடுத்து, அவரின் மனைவியிடம் இருந்த தாலிச் செயின், மோதிரம், கைவளையல் உள்ளிட்ட நகைகளை பறித்துக்கொண்டு தப்பி ஓடியதாக தெரிகிறது.
சம்பவ தகவலை அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வெட்டுப்பட்ட பார்த்திபனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் சிகிச்சையில் இருக்கிறார்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, தாக்குதலுக்கான காரணங்கள் மற்றும் மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த வழிப்பறி சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.