இலங்கைக்கு கடத்த முயன்ற  60 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் மீட்பு !

"Seizure of beedi leaves worth 6 million rupees during smuggling attempt to Sri Lanka"

தூத்துக்குடி மாவட்ட கடற்கரை வழியாக பீடி இலைகள் படகுமூலம் இலங்கைக்கு கடத்தப்பட உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 இதனைத் தொடர்ந்து கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய் அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

ஆறுமுகநேரி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டை மலை காட்டுப் பகுதி கொம்புத்துறை கடற்கரைக்கு செல்லும் வழியில் பீடி இலைகள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்தனர். போலீசார் வருவதை உணர்ந்த கடத்தல் கும்பல், அவர்கள் பயன்படுத்திய லாரியை நிறுத்தி விட்டு இருளில் தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர் போலீசார் லாரியில் சோதனை நடத்திய போது, 30 கிலோ எடையுள்ள 68 மூட்டைகளில் மொத்தம் 2,250 கிலோ பீடி இலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேச சந்தை மதிப்பில் இதன் மதிப்பு சுமார் ரூ.60 லட்சம் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பீடி இலைகளை பறிமுதல் செய்து, லாரியை சுங்கத்துறையிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தப்பிச் சென்றவர்களை கைது செய்ய விசாரணையும் தீவிரமாக நடந்து வருகிறது.