
கடலூர் ஆவடி ஆயுதப்படைப் பிரிவில் காவலராகப் பணியாற்றி வந்த சோனியா (26) என்ற பெண் கடலூர் அருகே உள்ள கொங்கராயனூர் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கும், முகிலன் என்பவருக்கும் திருமணம் நடந்து ஏழு ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஆறு வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், இவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். சோனியா சென்னையிலும், முகிலன் தனது மகளுடன் ஊரிலேயே வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சோனியா சொந்த ஊருக்குச் சென்று கணவர் முகிலனுக்கு போன் செய்து, மகளைப் பார்க்க விரும்புவதாகத் தெரிவித்ததால் முகிலனும் மகளை அழைத்து வந்து சோனியாவிடம் ஒப்படைத்துள்ளார். மூவரும் குடும்பமாக ஒன்றாகக் கடற்கரைக்குச் சென்று சுற்றிப் பார்த்துவிட்டு முகிலன் மகளை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில், ஜூலை 1ம் தேதி, சோனியா தனது கணவருக்கு போன் செய்து, தான் விஷம் குடித்துவிட்டேன் என்றும், மகளை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார்.
இதனால் அதிர்ந்துபோன முகிலன், சோனியாவின் வீட்டிற்கு சென்று, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல், 2ம் தேதி சோனியா உயிரிழந்தார்.
இது குறித்து காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே, சோனியா தனது கணவருக்கு ஒரு கடிதம் எழுதி, அதன் புகைப்படத்தை வாட்ஸ்அப் மூலம் அனுப்பியிருந்தார்.
அந்தக் கடிதத்தில், “சென்னை ஆவடியில் பணிபுரிந்த எனக்கு, அங்கு பணிபுரிந்த காவலர் ராஜு(28) என்பவர் அறிமுகமானார். முதலில் ராஜுவுடன் நண்பராக பழகி வந்தேன். பின்பு அவரிடம் எனது திருமண வாழ்க்கை பற்றி கூறினேன். விவகாரத்து ஆனவுடன் என்னை திருமணம் செய்து கொளவதாக உறுதியளித்தார். அதனை நம்பி நெருங்கி பழகி அவர் மூலம் கர்ப்பம் ஆனேன். இதனை ராஜுவிடம் கூறி திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டதற்கு அவர் கருவை கலைத்துவிடு என்று மிரட்டினார். அதை நான் கேட்காததால் அவர் என்மீது பொய்யான புகார் அளித்தார். அதனை காவல் துணை கண்காணிப்பாளர் விசாரித்தார். இந்த விவகாரத்தில் அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டனர். அன்று இரவு ராஜு என்னிடம் நாம் இருவரும் பேசி முடிவு எடுத்து கொள்ளலாம் என்றும், நீ குழந்தையை கலைத்து விடு 8 மாதத்திற்கு பிறகு திருமணம் செய்துகொள்ளலாம்” என்றும் கூறினார்.
“பணிச்சுமை அதிகமாக வழங்கியதால் கரு கலைந்துவிட்டது, இதனால் மன உளைச்சலில் உயிரை மாய்த்துக்கொள்கிறேன்” என்று கூறியிருந்தார். மேலும் தனது மரணத்திற்கு ராஜு மட்டுமே காரணம் என்றும், தனது கணவர் மற்றும் மகளை விசாரிக்க வேண்டாம் என்றும் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், காவல்துறையினர் காவலர் ராஜுவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.