
சென்னை சின்ன நீலாங்கரை பகுதியில் ஜூன் ஹோம்ஸ் என்ற பெயரில் தரகு வேலை செய்த நிகமத் நிஷா, வீடுகளை வாடகைக்கு எடுத்து அதை மீண்டும் லீசுக்கு விடும் முறையில் பெரிய அளவில் மோசடி செய்து வந்ததாக தெரியவந்துள்ளது.
அவர் வீடுகளை வாடகைக்கு எடுத்து, அந்த வீடுகளை மற்றவர்களுக்கு லீசுக்கு விடுவதாக கூறி ஒருவர் இருந்து ஒருவரிடம் 7 லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொண்டு தலைமறைவாகியுள்ளார்.
இந்த மோசடியில் சுமார் 3 கோடி ரூபாய் வரை பலர் இழந்ததாகக் கூறப்படுகிறது. இவரால் பாதிக்கப்பட்ட 46 பேர் நேரடியாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் நிகமத் நிஷாவை பிடிக்க தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். செல்போன் நெட்வொர்க் மூலம் இருப்பிடத்தை கண்டுபிடித்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்ன நீலாங்கரை பகுதியில் நடந்த இந்த வாடகை மோசடி சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.