13 வயது சிறுவன் கடத்தி கொலை! வனப்பகுதியில் உடல் மீட்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள மாவநட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் மஞ்சு தம்பதியினரின் இளைய மகன் ரோகித் (13)  நேற்று மாலை 4 மணி அளவில் இரண்டு மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டுள்ளார்.

சிறுவன் கடத்தப்பட்டதை குறித்து  பெற்றோர், அஞ்செட்டி காவல் நிலையத்தில் நேற்று இரவே புகார் அளித்துள்ளனர். இருப்பினும் நடவடிக்கை தாமதமானதாக பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது. இதனிடையே கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் அதேப் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  ரோகித்தின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அஞ்சட்டி பேருந்து நிலையத்தில் சாலையில் அமர்ந்து சிறுவனை கண்டுபிடித்து தர கோரி இன்று காலையில்  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, கடத்தப்பட்ட சிறுவன் ரோகித் அஞ்செட்டி பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  காட்டுப்பகுதியில் சடலமாக கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு கொண்டை ஊசி வளைவு பகுதியில் காவல் துறையினர் சிறுவன் ரோகித்தின் சடலத்தை கண்டெடுத்தனர்.

சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்திய வருகின்றனர். மேலும் 5 பேரை பிடித்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.