
கொளஞ்சியப்பன் என்ற 63 வயதுடைய நபர் கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகர் ஊராட்சி பி2 பிளாக் மாற்று குடியிருப்பு 5வது தெருவில் தனது மனைவி பத்மாவதியுடன் (55) வசித்து வந்தார்.
கொளஞ்சியப்பன் ஒரு ஓய்வு பெற்ற என்.எல்.சி.ஊழியர். பணி ஓய்வு பெற்ற பிறகு நெய்வேலியில் உள்ள தனியார் ஜவுளிக்கடையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இருவரும் ஏற்கனவே வேறொருவருடன் திருமணம் ஆகி பிரிந்தவர்கள்.
கொளஞ்சியப்பன் தனது முதல் மனைவி உயிரிழந்ததால், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் பத்மாவதியை மறுமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகிவிட்டது. மகன் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், கொளஞ்சியப்பனுக்கு நெய்வேலி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவாக மாறும் அளவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை மனைவி பத்மாவதி அறிந்ததால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கொளஞ்சியப்பனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு உள்ளதாக கூறி நெய்வேலி மகளிர் காவல் நிலையத்தில் பத்மாவதி புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் இருவருக்கும் இடையே இதுகுறித்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கொளஞ்சியப்பன் மீண்டும் இதுகுறித்து கேட்டால், உன்னைக் கொலை செய்துவிட்டு, வீட்டை அவள் பெயருக்கு எழுதி வைத்துவிடுவேன் என்று பத்மாவதியை மிரட்டியுள்ளார்.
இதனால், கணவன் மீது கடும் கோபத்தில் இருந்த பத்மாவதி கணவன் தூங்கி கொண்டிருந்த போது கணவனின் கழுத்தை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் பத்மாவதி கணவர் உடலுடன் விடியும் வரை வீட்டிலே இருந்துள்ளார்.
பின்னர் காலையில் தனது உறவினருக்கு போன் செய்து நடந்ததை கூறியதையடுத்து உறவினர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கொளஞ்சியப்பன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து நெய்வேலி போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்து நெய்வேலி டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் வீரமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி பத்மாவதியை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நெய்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.