எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக  கோலாலம்பூரில் பெரும் தீ விபத்து !!

எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக கோலாலம்பூரில் பெரும் தீ விபத்து

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில்  உள்ள புத்ரா ஹைட்ஸ் பகுதியில் இன்று ஏப்ரல் 1 ம் திகதி காலை பாரிய தீ விபத்து ஏற்பட்டது.

தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ் நிறுவனத்தின் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவால்  இன்று காலை 8 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது

500 மீட்டர் தொலைவுக்கு இந்த தீ பரவியுள்ளதாகவும் அருகிலுள்ள  பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

தீயணைப்புத் துறையினர்  மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு, தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இதுவரை, 12 பேர் தீ காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 82 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த  தீ விபத்து காரணமாக, அருகிலுள்ள வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியைச் சுற்றி இருக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி வருவதாகவும், அப்பகுதியை தனிமைப்படுத்தி மீட்பு பணிகளை வேகமாக மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன 

தீ விபத்துக்கான காரணமாக பெட்ரோனாஸ் நிறுவனத்தின் எரிவாயு குழாயில் கசிவு பற்றிய தகவல் உறுதி செய்யப்பட்ட பின்னர், அந்த பகுதிக்கு அருகிலுள்ள மூன்று எரிபொருள் நிலையங்களையும் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

இந்த தீ விபத்தின் போது  வானத்தை தொடும் அளவுக்கு தீ   கொளுந்துவிட்டு எரிந்த  காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தீ கட்டுக்குள் வரும்வரை, குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் அந்த பகுதியில் செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன்  சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளனர்.