
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் விசிக திருநின்றவூர் நகர செயலாளராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி கோமதி 26வது வார்டு கவுன்சிலராகவும், திருநின்றவூர் நகராட்சி வரி விதிப்பு சேர்மனாகவும் இருந்து வந்தார். இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் நடைபெற்றது. தற்போது நாலு குழந்தைகளுடன் குடும்பம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், கவுன்சிலர் கோமதிக்கு கடந்த சில மாதங்களாக ஆண் நண்பர் ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த கணவர் ஸ்டீபன் ராஜ், கோமதியிடம் இது குறித்து வாக்குவாதம் செய்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
சம்பவ நாளன்று கோமதி நடுகுத்தகை ஜெயராம் நகர் அருகே தனது ஆண் நண்பருடன் நின்று பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதை பார்த்த சிலர் ஸ்டீபன் ராஜுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற ஸ்டீபன் ராஜ், கோமதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆண் நண்பர் அங்கிருந்து ஓடியுள்ளார். அதே நேரத்தில், ஆத்திரமடைந்த ஸ்டீபன் ராஜ் தனது உடையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கோமதியை சரமாரியாக வெட்டி தாக்கியுள்ளார்.
தாக்குதலில் கோமதி தலை, முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தாக்குதலின் போது அவரது கையும் துண்டாகியுள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.
இதன்பின்னர் ஸ்டீபன் ராஜ் திருநின்றவூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் கோமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஸ்டீபன் ராஜை கைது செய்து போலீசார் கொலைக்கான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசிக பெண் கவுன்சிலர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருநின்றவூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.