
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி கிராமத்தை சேர்ந்த தங்கவேல் என்பவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு மின் விபத்தில் ஒரு காலை இழந்த நிலையில் வாழ்ந்துள்ளார்.
இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி, குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். அவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
கடந்த ஜூன் 14-ஆம் தேதி சித்திரங்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் பாதுகாப்பு பணியில் இருந்த பேரையூர் போலீஸ் நிலைய சிஐடி பிரிவு காவலர் லிங்குசாமி, தங்கவேலின் பெட்டிக்கடைக்கு வந்துள்ளார். அப்போது, தங்கவேல் கடையில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்ததையடுத்து, லிங்குசாமி விசாரணை நடத்தியுள்ளார்.
இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றி அடிதடியானது. இதில் தங்கவேலின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தாக்குதலில் காவலர் லிங்குசாமிக்கும் சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் கிடைத்த நிலையில், தங்கவேல் அளித்த புகாரின் பேரில் காவலர் லிங்குசாமி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
காவலரால் தாக்கப்பட்டு கையில் முறிவு ஏற்பட்ட தங்கவேல், “ஏற்கெனவே ஒரு காலை இழந்துள்ள நிலையில் இப்போது கையும் முறிந்துள்ளது. என் குடும்பம் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளது. தாக்கிய காவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மனவேதனை தெரிவித்துள்ளார்.இச்சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.